Published : 06 May 2015 06:05 PM
Last Updated : 06 May 2015 06:05 PM

சிறு, குறுந்தொழிலை பாதிக்கும் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்: இரா.முத்தரசன்

சிறு, குறுந்தொழிலை பாதிக்கும் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.மேலும், சிறு, குறுந்தொழிலுக்கு ஏதுவான கொள்கை வகுத்து தனிவாரியம் அமைத்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு சிறு, குறு மற்றும் கைத்தொழில் துறையில் இதுவரை தயாரிக்கப்பட்டு வந்த, 20 அத்தியாவாசிய பொருட்களையும் யார் வேண்டுமானாலும், தயாரித்து கொள்ளலாம் என சட்டம் இயற்றி இருப்பதன் மூலம் மறைமுகமாக இத் தொழிலையும் பெரு நிறுவனங்கள் விழுங்கிட வழி ஏற்படுத்தி உள்ளது.

முன்னர் சிறு, குறுந்தொழில் 825 பொருட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பின்னர் புதிய பொருளாதார கொள்கையை காங்கிரஸ் அரசு மூர்க்கமாக பின் பற்றியபோது, 325 பொருட்கள்தான் சிறு, குறு மற்றும் கைத் தொழில் பிரிவுகளுக்கு உரியது என்றது. இந்த நியாயமற்ற முறைகளை எதிர்த்து, சிறு, குறு தொழில் முனைவோர் நீதிமன்றம் நாடியபோது, சுதேசி பொருட்கள் பலவற்றை உள்நாட்டு, பெரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கிடு செய்ய கூடாது என நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தது.

சிறு தொழில், குறுந்தொழில் ஆதரவு என தேர்தல் நேரத்தில் முழங்கிய பாஜக தற்போது நீதிமன்ற தடையாணைகளையும் மீறி மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் ஊறுகாய், தீப்பெட்டி ரொட்டி மற்றும் பட்டாசு, கைவினை பொருட்கள் கதர் உற்பத்தி, தேன் தயாரித்தல், ஸ்டீல் பர்னிச்சர், கண்ணாடி பொருட்கள் எவர் சில்வாகை தயாரித்தல் என 20வது பொருட்களையும் யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என சட்டம் கொண்டுவந்துள்ளது.

இதனால் சுய சார்பு தொழிலுக்கு பெரும் நெருக்கடி ஏற்பவதோடு இதில் ஈடுபட்டிருக்கும் சுமார் 6 கோடி தொழிலாளர்கள் வாழ்வும் பாதிக்கப்படும் பேரபாயம் உருவாகி உள்ளது. இது நாட்டின் முதுகெலும்பை ஒடிக்கும் செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.

மத்திய அரசு ஒரு புறத்தில் சிறு, குறுந்தொழில் ஊக்குவிக்க முத்ரா வங்கி திட்டம் ரூபாய் 10 லட்சம் வரை கடன் என விளம்பரம் செய்து வருகிறது. அதே நேரத்தில் சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ள பல கோடி மக்களை பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்வெட்டு மூலப்பொருட்களின் விலை உயர்வு ஜாப் ஆர்டர் கிடைக்காமை, உற்பத்தி செய்த பொருட்களுக்கு வசூல் இல்லாமையால் பல லட்சக்கணகான சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

இவைகளை கருத்தில் கொண்டுதான் பொதுத்துறையில் 20 சதம் ஜாப் ஆர்டர்களை சிறு, குறு தொழிலுக்கு ஒதுக்கிடு செய்யவும் அதில் 4.4 எஸ்.சி, எஸ்.டி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. இன்றுள்ள உலக பொருளாதார முறைமையில் தனியார் பெரும் நிறுவனங்களிடம் மத்திய&மாநில அரசுகள் ஒப்பந்தம் போடும்போது 30 சதம் ஜாப் ஆர்டர்களை சிறு, குறு தொழிலுக்கு ஒதுக்கிட வழிவகை செய்திட வேண்டும்.

மத்திய அரசு உடனடி சிறு, குறுந்தொழிலை பாதிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவதோடு, சிறு, குறுந்தொழிலுக்கு ஏதுவான கொள்கை வகுத்து தனிவாரியம் அமைத்திட முன் வர வேண்டுமாய் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்''என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x