தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் குடிநீர் மூலம் புளோரைடு பாதிப்பு குறைந்துள்ளது: குடிநீர் வடிகால் வாரியம்

தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் குடிநீர் மூலம் புளோரைடு பாதிப்பு குறைந்துள்ளது: குடிநீர் வடிகால் வாரியம்
Updated on
1 min read

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல், பராமரிப்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்த தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு ஓசூரில் நடந்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகிறது. ஒகேனக்கல் குடிநீரை சமைக்கவும், குடிப்பதற்கும் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புளோரைடு நோய் பாதிப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

புளோரைடால் எலும்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதியில் இருந்து இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடிநீர் வழங்கும் பணிகளுக்கு ஆயிரம் லிட்டருக்கு தமிழக அரசு ரூ.8.55 செலவு செய்கிறது. இந்த திட்டம் இன்னும் 30 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. குடிநீரை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் திட்டப்பணிகள் குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர்கள் ராஜேஷ் (கிருஷ்ணகிரி), விவேகானந்தன் (தருமபுரி) ஆகியோர் தொடங்கி வைத்தனர். கருத்தரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குநர் நிர்மல்ராஜ், ஓசூர் சார் ஆட்சியர் செந்தில்ராஜ், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை பிரதிநிதிகள் சுப்புரோட்டோ தழுக்குதர், தகாஹிரோசுசுக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புளோரைடு பாதிப்பு தொடர்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை மேலாண்மை இயக்குநர் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in