

மே 22-ம் தேதியில் இருந்து 24-ம் தேதிக்குள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
மே 11-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.ஆனால் அதற்குப் பின்னர் அவர் இதுவரை பொதுமக்களையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்கவில்லை. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன.
ஜெயலலிதா நல்ல நாளுக்காக காத்திருக்கிறார் என்றும், தீர்ப்பில் குழப்பம் இருப்பதால் கர்நாடக அரசின் முடிவை எதிர்நோக்கியிருக்கிறார் என்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று காலை, "வரும் 22-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 7 மணியளவில் நடைபெறும் அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக, ஜெயலலிதா ஏன் மவுனம் காக்கிறார், ஏன் தயங்குகிறார் போன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வந்தது.
இருப்பினும் அன்றைய தினம் (மே 22) ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியை கலைக்க உத்தரவிடுவாரா? ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவாரா? என்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.
இந்நிலையில், மே 22-ம் தேதியில் இருந்து 24-ம் தேதிக்குள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இது தொடர்பாக பிடிசி செய்தி நிறுவனத்துக்கு அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "வரும் 22-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றார்.