

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு வெளியானதும் அவரது வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டத்தில் திரண்டிருந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொண்டர்களின் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டத்தால் அந்தப் பகுதியே களைகட்டியிருந்தது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியாவதையொட்டி சென்னையில் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டத்தில் நேற்று காலை 7 மணியில் இருந்தே கட்சித் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
நேரம் ஆக ஆக தீர்ப்பு எப்படி வருமோ என்ற பரபரப்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் ஏற்பட்டது. ஏராளமான பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர். காலை 11 மணியளவில் ஜெயலலிதா விடுதலை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் செல்போனில் வந்தது. உடனே அதிமுக நிர்வாகி ஒருவர், ‘அம்மா விடுதலையாயிட்டாங்க’ என்ற உரக்க சத்தமிட்டார். உடனே அதிமுகவினர் தயாராக வைத்திருந்த பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தனர். ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரத்தில் மேளம், தாரை தப்பட்டை முழங்க வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினர். தொண்டர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் போயஸ் தோட்டமே அமர்க்களப்பட்டது.
தங்கள் தலைவியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தொண்டர்கள் ஜெயலலிதா வீட்டை நோக்கி முன்னேறினர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் வந்தது. கூட்டத்துக்குள் சிக்கிய அவரது கார் போயஸ் தோட்டத்துக்குள் போக முடியவில்லை. வேறுவழியில்லாமல் அங்கே இறங்கி நடந்தே சென்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலரும் பூங்கொத்துடன் வந்தனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, மதுரை ஆதீனம், நடிகர்கள் ராமராஜன், செந்தில், நடிகை விந்தியா உள்ளிட்டோரும் ஜெயலலிதா வீட்டுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தனர்.
டிஜிபி கே.அசோக்குமார், மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், என்.எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோரும் போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தனர்.
போயஸ் தோட்டத்தில் மலர்க்கொத்துகளும், கோயில் பிரசாதங்களும் குவிந்தன. அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஜெயலலிதா வீட்டுக்கு செல்லும் வழியில் இருபுறமும் பிரம்மாண்டமான கட்-அவுட்கள் வைக்கப்பட்டன. அதில் ஜெயலலிதா படத்துடன் ‘வெற்றி’ என்று தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
அதிமுக மகளிரணியைச் சேர்ந்த சிலர், அன்னதானம் செய்தனர். ஜெயலலிதா வீட்டு முன்பு உள்ள விநாயகர் கோயிலில் அதிமுகவினர் தேங்காய் உடைத்து வழிபட்டனர். திருஷ்டி பூசணிக்காய் எடுத்து வந்து உடைத்தனர்.
போயஸ் தோட்டம் பிரதான தெருவில் உள்ள பிள்ளையார் கோயில் முன்பு சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் பிருதிவிராஜன் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். அக்கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சிதறு தேங்காய் உடைத்தனர்.
அதிமுக அலுவலகத்தில்..
அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் காலை 8 மணி முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் வரத் தொடங்கினர். காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியானதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அலுவலகத்துக்கு வெளியே வாகனத்தில் எம்ஜிஆர் பாடல்களை இசைக்குழுவினர் பாடிக் கொண்டிருந்தனர். தீர்ப்பு வந்த 10 நிமிடங்களில் அனைவரும் போயஸ் கார்டனுக்கு சென்றுவிட்டனர்.