Published : 24 Mar 2014 09:26 AM
Last Updated : 24 Mar 2014 09:26 AM

டாஸ்மாக் விற்பனையில் தருமபுரி 2-ம் இடம்: தமிழக அரசின் சாதனை என அன்புமணி குற்றச்சாட்டு

அனைத்துத் துறைகளிலும் பின் தங்கியிருந்தாலும், டாஸ்மாக் விற்பனையில் தருமபுரி மாவட்டம் தமிழகத்திலேயே இரண்டாமிடம் பிடித்துள்ளது. இதுவே தமிழக அரசின் சாதனை என்று அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தருமபுரி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாவட்டத் தலைவர் கந்தசாமி, தொகுதி பொறுப்பாளர் பிரபாகரன், தேமுதிக மாவட்டச் செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அன்புமணி ராமதாஸ் பேசியது: பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைந்து விடக் கூடாது என பல்வேறு சதிகள் நடைபெற்றன. அதைமீறி இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.

ஜெயலலிதா அச்சம்

இந்தக் கூட்டணி வெற்றி கரமாக அமைந்ததைக் கண்டு முதல்வர் ஜெயலலிதா அச்சமடைந்துள்ளார். இது அவரது முதல் தோல்வி.

கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் பின்தங்கிய நிலையில் இருக்கும் தருமபுரி மாவட்டம், டாஸ்மாக் விற்பனையில் மட்டும் தமிழகத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இதுவே தமிழக அரசின் சாதனை. நான் வெற்றி பெற்று, இந்த நிலையை மாற்றப் பாடுபடுவேன்.

தொடக்கத்தில் கூட்டணியில் சில குழப்பங்கள் இருந்தாலும், தற்போது அவை நீங்கிவிட்டன. பலம் வாய்ந்த கூட்டணியாக தே.ஜ. கூட்டணி மாறியுள்ளது.

அமைதி, வளம், வளர்ச்சி என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. சட்டம்-ஒழுங்கு சீரழிவு, வறட்சி, அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு என்ற நிலையில், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவை தமிழகத்தில் எங்கே இருக்கிறது? என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x