நுண் நீர் பாசன முறையில் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்: இஸ்ரேல் சென்று வந்த பொள்ளாச்சி விவசாயிகள் யோசனை

நுண் நீர் பாசன முறையில் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்: இஸ்ரேல் சென்று வந்த பொள்ளாச்சி விவசாயிகள் யோசனை
Updated on
2 min read

இஸ்ரேலைப் போல நீர் மேலாண்மையில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், நமது நாட்டிலும் வேளாண்மையை ஊக்கப்படுத்தலாம் என்கின்றனர் பொள்ளாச்சி விவசாயிகள். சமீபத்தில் இஸ்ரேல் சென்று அங்குள்ள விவசாய முறைகளை அறிந்து வந்துள்ளனர் இந்த விவசாயிகள்.

விவசாயத்தில் பல்வேறு புதிய வழிமுறைகளைப் பின்பற்றி வரும் நாடு இஸ்ரேல். கடுமையான தண்ணீர் பற்றாக்குறை இருந்தும், சரியான நீர் மேலாண்மை திட்டமிடல் காரணமாக வேளாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்நாடு தொடங்கியுள்ளது. அதைப் பின்பற்றிய நீர் மேலாண்மையை நமது நாட்டிலும் நடைமுறைப்படுத்த முடியும் என்கின்றனர் பொள்ளாச்சி விவசாயிகள். இஸ்ரேலில் நடந்த சர்வதேச வேளாண் கண்காட்சிக்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த இளநீர் விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 விவசாயிகள் சென்று திரும்பியுள்ளனர். கூடவே, அங்குள்ள விவசாய முறைகளையும், நீர் மேலாண்மை நுணுக்கங்களையும் பார்வையிட்டு வந்துள்ளனர்.

சொட்டுநீர் பாசனம், நீர் ஆவியாவதைத் தடுக்கும் நிழல் வலை, மண்ணில்லா விவசாயம் உள்ளிட்ட முறைகளால் குறைந்த அளவு நீரில் அதிக ஆரஞ்சு விளைச்சல் அங்கு நடப்பதாகவும், அதையே இங்கு தென்னை விவசாயத்துக்கும் நடைமுறைப்படுத்தலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கணினிமயம்

இஸ்ரேல் சென்று வந்த விவசாயிகளில் ஒருவரான ஏ.கே.ரத்தினம் கூறியதாவது: தமிழகத்தில் நிச்சயமாக சொட்டுநீர், நுண் நீர் பாசன முறைகளை கொண்டு வரலாம். இஸ்ரேலில் திறந்த வெளியில் நீர் பாய்ச்சுவதே இல்லை. பாத்தி, வரப்பு, கிணறு ஆகியவற்றை பார்க்கவே முடியவில்லை. இதனால் நிலத்தடி நீருக்கான தேவையே இல்லை. நமக்கு இங்கு கிடைக்கும் மழையில் 4-ல் ஒரு பங்கு மழைதான் அங்கு உள்ளது. மழை நீரை நீர்நிலைகளில் தேக்கி, அனைத்து விளைநிலங்களுக்கும் சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பிரித்து வழங்கப்படுகிறது. நீர் பிரித்து வழங்கும் முறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

நமக்கு இங்கு மானியத்திலும், இலவசமாகவும் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. பாலைவனமாக இருந்தாலும் தண்ணீரை முறையாக வழங்கி விவசாயத்தை பெருக்குகின்றனர். கழிவுநீரை சுத்திகரித்து பயன் படுத்துகின்றனர். சுமார் 15 வருட வளர்ச்சியில் நம்மைவிட முன்னிலையில் உள்ளனர். அங்குள்ளதை விட இங்கு நீராதாரங்கள் அதிகம். குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் உள்ளது. அதில் இதுபோன்ற நீர் பாசன முறையை கொண்டு வரலாம்.

சொட்டுச்சொட்டாக…

பயிருக்கு சொட்டு சொட்டாக நீர் வழங்கினால், நீர் சேதமில்லாமல், அவை செழித்து வளரும். இதைத்தான அங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் செய்கின்றனர். அதேபோன்ற நுண் நீர் பாசன முறையை பி.ஏ.பி. திட்டத்திலும் கொண்டு வரலாம். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த மாதம் கூட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் வெருவேலாம்பாளையத்தில் சிறிய அளவில் இதுபோன்ற மாதிரித் திட்டம் உள்ளது. அதேபோல உடுமலை தாலுகா அணிக்கடவு முதல் பெரியகுமாரபாளையம் வரை 40 ஆயிரம் ஏக்கருக்கு நுண் நீர் பாசனத்தை செயல்படுத்த முடிவு செய்து முதல்கட்டமாக 4 ஆயிரம் ஏக்கரில் மாதிரி திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருகின்றனர். அந்த திட்டம் வந்தால், பெருமளவில் நீர் சிக்கனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in