

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்யா உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதல் அணு உலையில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை வணிகரீதியான மின் உற்பத்தி தொடங்கியது.
இந்த அணு உலையில் கடந்த ஜனவரி 14-ம் தேதி தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் ஜனவரி 18-ம் தேதி மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
அதன்பின் எவ்வித தடையும் இல்லாமல் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் மாலை 6.40 மணியளவில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநீரை வெளியேற்றும் பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ள தாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறும்போது, ‘கோளாறை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்’ என்றார் அவர்.