

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் அதிகாலை கொடியேற் றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம் மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது. இதற்காக கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் நேற்று அதிகாலை 3.20 முதல் 4.50 மணிக்குள்ளாக மேஷ லக்னத்தில் வேதங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்ததுடன் வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவம் தொடங்கிய தையடுத்து, காஞ்சி நகரில் தினமும் உற்சவர் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேலும், ஜூன்1-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவமும் 5-ம் தேதி திருத்தேர் உற்சவமும் அதிகாலை 2.15 மணி முதல் 3 மணிக்குள் மீன லக்னத்தில் திருத்தேர் மீது எழுந்தருளும் வைபவமும் நடைபெற உள்ளன. பிரசித்தி பெற்ற அத்திகிரிவரதர் குடிகொண்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் வரும் 7-ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இந்த உற்சவத்தையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்படும். உற்சவம் நடை பெறும் 10 நாட்களும் காஞ்சி நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் தலைமையிலான போலீஸார் பிரம்மோற்சவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உற்வச ஏற்பாடு களை இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன் கவனித்து வருகிறார்.