

ராஜபாளையம் அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை விருதுநகர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
டாஸ்மாக் மதுபான விடுதி பார் நடத்துவதையொட்டி மீனாட்சி சுந்தரத்திற்கும், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சீனிவாசன் (37) என்பவருக்கும் மோதல் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கவுன்சிலர் கொலை தொடர்பாக சீனிவாசன், பி.நாதன், எம்.நீரதுலிங்கம் மற்றும் வி.ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5-வது நபர் தமிழ்வளவன் என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 ஆயுதங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் நகர் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான விடுதியை நடத்தி வந்தார் சீனிவாசன். ஆனால், சமீபத்தில் பார் நடத்தும் உரிமை கைமாறியதாக தெரிகிறது. இதனையடுத்து காட்டன் மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை ஒன்றைத் திறந்து பார் வசதிக்கு அனுமதி அளிக்குமாறு கவுன்சிலர் மீனாட்சி சுந்தரத்திடம் சீனிவாசன் உதவி கேட்டதாகவும், ஆனால் மீனாட்சி சுந்தரம் உதவி செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.