விவசாயத்தை மேம்படுத்த ஜிபிஎஸ் கருவிகளை பயன்படுத்தி மண் மாதிரி ஆய்வு

விவசாயத்தை மேம்படுத்த ஜிபிஎஸ் கருவிகளை பயன்படுத்தி மண் மாதிரி ஆய்வு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் வட்டார அளவில் ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் விவசாயத்தை மேம்படுத்த, ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி நவீன முறையில் மண் மாதிரி ஆய்வுகளை வேளாண்மைத் துறை நடத்தி வருகிறது.

பருவத்துக்கேற்ப பயிரை விளைவித்து பயனடைய, மண் பரிசோதனை அவசியமாக உள்ளது. மத்திய அரசின் மண் வளத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் விவசாயிகளின் மண் மாதிரிகளை வேளாண் துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அடுத்தடுத்து என்ன பயிரிடலாம் என்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில், கடந்த ஏப்ரல் முதல் நவீன தொழில்நுட்ப முறைகள் கையாளப்பட்டு வருவதாகவும், இதனால் துல்லியமான மண் ஆய்வும், மண் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்த பதிவும் கிடைப்பதாக, வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆச்சிபட்டியிலுள்ள விவசாய நிலங்களில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேற்று மண் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். ஆய்வு முடிவின்படி, அடுத்தடுத்து பயிர் செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுமென, வேளாண் உதவி இயக்குநர் உமாராணி தெரிவித்தார்.

புதிய முறை குறித்து மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் பாலாஜி கூறியதாவது:

வட்டார அளவில் வருவாய் கிராமங்களை தேர்வு செய்து, புல எண் அடிப்படையில் வரையப்பட்ட அந்த கிராம வரைபடத்தில், தலா 2.5 ஹெக்டேர் அளவில் தனித்தனி பகுதிகளாக பிரித்து அளவீடு செய்யப்படுகிறது.

அளவீடு செய்யப்பட்ட இடத்தில், 8 மண் மாதிரிகள் எடுத்து அதிலிருந்து 1.5 கிலோ மண் மாதிரி இறுதியாக எடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தின் உரிமையாளர், ஏற்கெனவே அங்கு விளைவிக்கப்பட்ட பயிர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, அந்த இடத்தை அட்சரேகை, தீர்க்கரேகை அளவீடுகளின்படி ஜி.பி.எஸ் கருவியில் பதிவு செய்கிறோம். இதனால், அந்த குறிப்பிட்ட மண் மாதிரி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

மண் மாதிரிகளை 1 மாதத்துக்குள் ஆய்வு செய்து முடிவுகள் கூறப்படும். அதில் அங்குள்ள மண்ணின் தன்மை, தேவைப்படும் சத்துக்கள், எந்த மாதிரியான பயிர்களை விளைவிக்கலாம் உள்ளிட்ட விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். வாய்க்கால் பாசனம் உள்ள பகுதிகளில், 2.5 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரி எடுக்கப்படுகிறது. இதுவே கிணற்றுப்பாசனம் என்றால், 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரி எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in