

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தின்றி ஆம்புலன்ஸை இயக்கிய திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஓட்டுநர்கள் 4 பேருக்கு, தமிழக அரசு 4 கிராம் தங்கக் காசு பரிசு அறிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு மேல் விபத் தில்லாமல் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களை கவுரப்படுத்தும் வகையில், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கக் காசு பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு ஓட்டுநர்கள் தங்களுடைய பணிக் காலத்தில் ஒருமுறையாவது சிறு விபத்துகூட இல்லாமல் வாகனங்களை இயக்குவது மிக அபூர்வம். சிரமமும் கூட.
இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக, சிறு விபத்துகூட ஏற்படுத்தாமல், பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எஸ். பெரிய ராமசாமி, வி. தங்கத்துரை, எ. பிரான்சிஸ் பெஸ்தி, பி.பால்ராஜ் ஆகிய 4 பேருக்கு, தமிழக அரசு 4 கிராம் தங்கக் காசு பரிசு அறிவித்துள்ளது.
தமிழக அரசிடம் பரிசுபெறும் 4 ஓட்டுநர்களும், தங்களது பணி அனுபவத்தை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்டனர்.
சாலையில் முழு கவனம்
பால்ராஜ் கூறும்போது, 86 ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநராகச் சேர்ந்தேன். வாகனத்தை குழந்தை மாதிரி கவனிக்க வேண்டும்.
வாகனத்தை இயக்கும்போது ஒரு நொடி கவனத்தை தவறவிட்டால் கூட விபரீதம் ஆகிவிடும். வீட்டில், சக ஊழியர்களுடன் கூட பிரச்சினைகள் இருக்கலாம். வாகனத்தை இயக்கத் தொடங்கிவிட்டால் அதையெல்லாம் மறந்து விட வேண்டும். வாகனத்தை எடுக்கும்போது முதலில் பிரேக் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். பிறகு ஆயில் பார்க்க வேண்டும். ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றார்.
எஸ்.பெரியசாமி கூறுகையில், 85 ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் கிளீனராகச் சேர்ந்தேன். 91 ஆம் ஆண்டு ஓட்டுநரானேன். நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும், இறந்தவர்கள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக் கவும் 32 மாவட்டங்களுக்கும் ஒரு விபத்து கூட இல்லாமல் சென்று வந்து விட்டேன். நாம் நமது உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது போல, வாகனத்தையும் தினமும் எடுக்கும்போதும், மாலையில் கொண்டுவந்து விடும்போதும் இன்ஜின், டயர்களை சுற்றி கவனிக்க வேண்டும். சின்ன பழுது ஏற்பட்டால் கூட தள்ளிப் போடாமல் உடனே சரிசெய்ய வேண்டும் என்றார்.
வி.தங்கதுரை கூறும்போது, 89-ம் ஆண்டு ஆம்புலன்ஸ் இயக்க ஆரம்பித்தேன். ஆம்புலன்ஸ் மற்ற வாகனங்களைப் போல இல்லை. விபத்து எப்போது நடக்கும். நோயாளிகள் எப்போது, அபாயக் கட்டத்துக்குச் செல்வர் என சொல்ல முடியாது. ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானாலோ, வழியில் பழுதாகி நின்று விட்டாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால, எந்நேரத்திலும் ஆம்புலன்ஸை இயக்குவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்றார்.
எ.பிரான்சிஸ் பெஸ்தி கூறுகையில், 87 ஆம் ஆண்டு முதல் ஆம்புலன்ஸை இயக்கி வருகிறேன். சாலையில் நம்முடைய வேகக் கட்டுப்பாடும், கவனமும்தான் மிக முக்கியம். முன்பெல்லாம் சாலை குண்டும், குழியுமாக இருக்கும்.
இன்று வாகனம் பழுதானாலோ, கவனம் சிதறினாலோ மட்டும் விபத்து ஏற்படும். இந்த இரண்டிலும் கவனம் தேவை என்றார்.