

சென்னையில் உள்ள தேர்தல் துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில நாள்களில் மட்டும் 4 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. புகார் மீதான நடவடிக்கை மற்றும் வாகன சோதனையில் ரூ.1 கோடி பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 5-ம் தேதி அமலுக்கு வந்தன. அப்போதிருந்து அரசியல் கட்சிகளை தேர்தல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. வாக்காளர்களைக் கவரும் வகையில் பணம், பொருட்களை கட்சிகள், வேட்பாளர்கள் தருகிறார்களா என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தேர்தல் அதிகாரி (ஆட்சியர்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலும் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த சில நாட்களாக புகார்கள் பெருமளவில் குவியத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சென்னை கட்டுப்பாட்டு அறை கடந்த 1-ம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகிறது. அதில் இதுவரை 4 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன. ஒரு நாளுக்கு குறைந்தது 500 புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளி மாவட்ட புகார்கள் வந்தால் அந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படுகிறது. இதுபோன்ற புகார்களைத் தொடர்ந்தும், வாகனச் சோதனையின்போதும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சுமார் ரூ.1 கோடி பிடிபட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.