ரஷ்ய நிறுவனம் திடீரென வெளியேறியதால் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு

ரஷ்ய நிறுவனம் திடீரென வெளியேறியதால் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு
Updated on
1 min read

அரசினர் தோட்டத்தில் இருந்து சைதாப்பேட்டை வரையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம் திடீரென வெளியேறியதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2007 ம் ஆண்டு தொடங்கின. 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 24 கி.மீ. (19 ரயில் நிலையங்கள்) சுரங்கப் பாதையாகவும், 21 கி.மீ. உயர்மட்ட ரயில் பாதையாகவும் (13 ரயில் நிலையங்கள்) அமைக் கப்படுகின்றன. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து சைதாப்பேட்டை வரையான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரஷ்ய நிறுவனமான மாஸ்மெட்ரோ, இந்திய நிறுவனமான கேமன் ஆகியவை இணைந்து மேற்கொண்டன. ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணியை கேமன் நிறுவனமும் சுரங்கம் தோண்டும் பணியை மாஸ்மெட்ரோ நிறுவனமும் செய்து வந்தன.

இந்நிலையில், மாஸ்மெட்ரோ நிறுவனம் திடீரென சுரங்கம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ரஷ்யாவுக்கு சென்றுவிட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசினர் தோட்டம் முதல் சைதாப்பேட்டை வரை சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இருபுறமும் 3.25 கி.மீ. தொலைவுக்கான பணிகள் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. இதற்கிடையே நிறுவனங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மாஸ்மெட்ரோ நிறுவனம் வெளியேறிவிட்டது. எனவே, மீதமுள்ள பணியை கேமன் நிறுவனம் தொடர்ந்து செய்ய உள்ளது. மொத்தப் பணிகளையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in