

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக, தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல் 17-5-2015 முதல் பதவி விலகியுள்ளார். இதனை அத்தேதியிலிருந்து பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை - ஆர்.கே. நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு நிலவுவதாக அக்கட்சி வாட்டாரங்கள் கூறுகின்றன. | விவரம் >சென்னை - ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு
முன்னதாக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஜெயலலிதா வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு கூட்டுவதாக அறிவித்தார்.
இக்கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது. பதவியேற்பு விழா 22 அல்லது 23-ம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.