

சுனாமியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் தங்கி கல்வி பயிலும் இல்லத்துக்கு ஆஸ்திரேலியா நிறுவனத்தின் உதவியால் சூரிய ஒளி மின்சாரம் கிடைத்துள்ளது.
நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் உள்ளது நம்பிக்கை குழந்தைகள் இல்லம். இங்கு சுனாமியால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, இருப்பிட வசதியுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு தற்போது 37 குழந்தைகள் தங்கியுள்ளனர்.
இந்த இல்லத்துக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் ரூ.18 லட்சத்தில் 10 கிலோ வாட்ஸ் கொண்ட சோலார் பேனல்களை அமைத்துக் கொடுத்துள்ளது.
அதன் மின் உற்பத்தி தொடக்கவிழா நேற்று நம்பிக்கை இல்லத்தில் நிறுவனர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் பழனிசாமி சூரிய ஒளி மின்சார உற்பத்தியை தொடங்கி வைத்தார். இனி மின்சாரம் இல்லாத நேரத்திலும் இந்த இல்லத்தில் அனைத்து உபகரணங்களும் சூரிய ஒளி மூலம் இயங்கும். இதன்மூலம் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு இரவு, பகல் எந்நேரமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரேமண்ட், ஹேரிங், ஜூலி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.