

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான நகரா மீண்டும் ஒலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாத சுவாமி கோயிலில் மன்னர் சேதுபதி காலத்தைச் சேர்ந்த 300 ஆண்டுகள் பழமையான இரண்டு நகராக்கள் உள்ளன. ஐந்தடி உயரம் உடைய பிரமாண்டமான இந்த நகராக்களில் எழுப்பப்படும் ஓசை கடல் காற்றின் உதவியுடன் தலைமன்னார் வரை ஒலித்தது.
இந்த நகராக்கள் தற்போது கோயிலில் பராமரிப்பின்றி கிழக்கு வாசல் முன்பு வெட்ட வெளியில் போடப்பட்டதால் அவற்றில் ஒன்று முற்றிலும் கிழிந்து பயன்பாடின்றி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் பாலாஜி கூறியதாவது:
நகரா என்பது தோலினால் ஆன ஒரு இசைக் கருவி. வட்ட வடிவம் கொண்ட இந்த இசைக் கருவி பழமை வாய்ந்த கோயில்களின் பூஜைகள், விழாக்கள், சுவாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது இசைக்கப்படுவது மரபாகப் பின்பற்றப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை நகராக்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு கோபுரம் எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் இருந்து தினமும் எழுப்பப்படும் 'தொம்... தொம்’ என்ற நகரா ஓசைகளை வைத்தே ராமேசுவரம் தீவில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தொடக்க நேரம், இடைவேளை நேரம் கணக்கிடப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக கோயிலில் நகராக்கள் சரிவர ஒலிக்கப்படுவதே கிடையாது. முறையான பராமரிப்பு இல்லாததால் இரண்டு நகராக்களில் ஒன்று முற்றிலும் கிழிந்து விட்டது. இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 25 பிரிவின்படி கோயிலை பாதுகாக்க பூஜைகள், ஆன்மிக மரபை, முறையாகப் பின்பற்ற வேண்டும்.
ஆனால், ராமேசுவரம் கோயிலில் நகரா உட்பட பல பக்க வாத்தியங்களை இசைப்பது கிடையாது.
இது, ஆகம மரபுக்கு எதிரானது, இந்த நகராக்களை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அதிகாரி யிடம் கேட்டபோது, நகராக்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தினமும் பூஜை நேரத்தில் ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.