

பழநியில் விடிய விடிய பெய்த கனமழையால் பழநி - கொடைக்கானல் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்துவருகிறது. கொடைக்கானலில் இருவார காலமாக மழை கொட்டிவருகிறது. பழநியில் நேற்று முன்தினம் மாலை முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியது. நேற்று காலை வரை தொடர்ந்து 12 மணி நேரம் விடிய விடிய மழை கொட்டியதால் பழநியில் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.
பழநி - கொடைக்கானல் சாலையில் நள்ளிரவு பெய்த மழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பழநி அருகே வடகவுஞ்சி 40-வது ஓடை என்ற பகுதியிலுள்ள சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்த கற்கள், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
வழிநெடுக மலைப்பாதையில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. மலைச்சாலை யில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் கொட்டியது. அதனால், பல இடங்களில் வெள்ளத்தால் சாலைகள் அரித்து காணப்பட்டன. அதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பழநி - கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நேற்று கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கோவை, திருப்பூர், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலாப் பயணிகள் கார், பஸ்களில் பழநி வழியாக கொடைக்கானலுக்கு இந்த சாலையில் வந்தனர். பழநி - கொடைக்கானல் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோடை விழாவுக்கு செல்லாமல் ஊருக்கு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மற்ற சுற்றுலாப் பயணிகள் திண்டுக்கல் வந்து கொடைக்கானல் சென்றனர். அதனால், அவர்கள் மழையில் கடும் அவதியடைந்தனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று மதியம் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மண், கற்கள், பாறைகள், ஒடிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி சாலையை தற்காலிகமாக சீரமைத்து வருகின்றனர். ஆனால் இன்னும் போக்குவரத்து முழுவதும் சீராகவில்லை.
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்
பழநியில் நேற்று பெய்த மழையில் கோம்பைப்பட்டி பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அதனால் கோம்பைப்பட்டி, பெரியதுரையான் கோயில், தேக்கம்தோட்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் நெல், வாழை, மக்காச்சோளம், கரும்பு ஆகியன வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் பழநி, கொடைக்கானலில் பெய்யும் தொடர்மழையால் குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமா நதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பழநியில் சில பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்ததனால் நள்ளிரவு அப்பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் புகுந்தனர். பழநியில் நேற்று 47 மி.மீ. மழை பெய்தது.