

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. குமரகுரு எம்எல்ஏ தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டதும் திருநங்கைகள் தாலி அறுத்து விதவைக் கோலம் பூண்டு கதறி அழுதனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த மாதம் 21-ம் தேதி 18 நாள் சித்திரை பெருவிழா தொடங்கியது. மகாபாரத யுத்தத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விழாவுக்கு மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் குவிந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோயிலுக்கு வந்திருந்த திருநங்கைகள் பூசாரி கைகளால் தாலி கட்டிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை குமரகுரு எம்எல்ஏ வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அப்போது, ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தில் விளைந்த காய்கனிகள், தானியங்களை தேர் மீது சூறைவிட்டனர். தேரின் முன்பாக திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் மாலைகளை வீசினர். மேலும், குவியல் குவியலாக கற்பூரம் ஏற்றி அரவானை வழிபட்டனர்.
பின்னர், அழிகளம் நோக்கி தேர் புறப்பட் டது. அப்போது, தங்களின் கணவரான அரவானை களப் பலியிட அழைத்துச் செல்வதாக கூறி, திருநங்கைகள் கதறி அழுதனர். அரவான் சுவாமி களப் பலியிடப் பட்ட பிறகு, கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தும், தாலிகளை அறுத்தும், நெற்றியில் இருந்த பொட்டை அழித்தும் ஒப்பாரி வைத்தனர். அதன்பிறகு, அருகில் இருந்த கிணறுகளில் தலைமுழுகி குளித்து வெள்ளை உடைகளை அணிந்து விதவைக் கோலம் பூண்டனர். இதையடுத்து, திருநங்கைகள் அனைவரும் அவரவர் ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
சித்திரைத் திருவிழாவில் நேற்று மாலை அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று விடையாத்தி நிகழ்ச்சியும் நாளை தர்மர் பட்டாபி ஷேகமும் நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.