

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் நேற்று காலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை கடந்த 26-ம் தேதி விஜயகாந்த் திடீரென சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து மறுநாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகளுடன் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து தமிழகப் பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார்.
பின்னர் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி ஆகியோரை விஜயகாந்த், பிரமேலதா, சுதீஷ் ஆகியோர் தனியாக சந்தித்துப் பேசினர். விஜயகாந் தின் இந்த திடீர் அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு விஜயகாந்த் திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் பிரேமலதாவும் சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் அவர் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.