

ஆவடி கனரக தொழிற்சாலை பணிக்கான எழுத்துத் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த 3 வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில், 650 கடைநிலை ஊழியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி, இந்தியா முழுவதும் நடந்தது. இதில், 28 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அந்த வகையில், ஆவடியில் நடந்த எழுத்துத் தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 604 பேரில், முதல் கட்டமாக 279 பேருக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, ஆவடியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது கல்வி உள்ளிட்ட சான்றி தழ்களை அதிகாரிகளிடம் சமர்ப் பித்தனர்.
அப்போது, தேர்ச்சி பெற்றவர் களின் கைரேகையையும், அவர் கள் தேர்வு எழுதிய போது பதிவு செய்யப்பட்ட கை ரேகையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட் டது.
இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாதகுமார் (26), சாந்தன்குமார்(23), சஞ்சித்சிங் யாதவ் (29) ஆகியோரின் கை ரேகைகள், அவர்கள் தேர்வு எழுதிய போது இருந்த கைரேகைகளுடன் பொருந்தவில்லை.
இதையடுத்து, பிரகலாதகுமார் உள்ளிட்ட 3 பேரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த ஆவடி டேங்க் போலீஸார், 3 பேரையும் நேற்று கைது செய்தனர். மூவரிடமும், பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதாமல், ஆவடி தேர்வு மையத்தை தேர்வு செய்தது ஏன்? இவர்களுக்கு பதில் தேர்வு எழுதியவர்கள் யார் யார்? என்பன உள்ளிட்ட கோணங் களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.