Published : 08 May 2015 08:28 PM
Last Updated : 08 May 2015 08:28 PM

பச்சிளம் குழந்தைகள் இறப்பை குறைப்பதே அரசின் நோக்கம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் ஒற்றை இலக்கத்தை அடைந்துவிட வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 64 அரசு மருத்துவமனைகள், மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த 10.20 லட்சம் பிரசவங்களில் 67 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன. 1.10 லட்சம் பச்சிளம் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நன்கு குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் சிசு பராமரிப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் சிசு இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 42 மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 21 என உள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பு பெரும்பாலும் மூச்சுத்திணறல், குறைப்பிரசவம், எச்.எம்.டி., நோய் மற்றும் தொற்று நோய் என்ற 4 முக்கிய காரணங்களால் ஏற்படுகின்றன. இந்த நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க பேறுகால முன் கவனிப்பை செம்மைப்படுத்த வேண்டும்.

குறைமாத பிரசவத்தால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் பிரச்சினைகளை தடுக்க பிரசவத்துக்கு முன் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 35 வாரத்துக்கு முன் ‘ஸ்டீராய்டு’ மருந்தை செலுத்துவதன் மூலம் எச்.எம்.டி. நோய் தவிர்க்கப்பட்டு வருகிறது. எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு ‘கங்காரு மதர் கேர்’ எனும் சிகிச்சை முறை பச்சிளம் குழந்தை துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அ.சந்திரநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் கே.குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x