Published : 14 May 2015 12:43 PM
Last Updated : 14 May 2015 12:43 PM

எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் நடிகை வனிதா: விநியோகஸ்தர் குற்றச்சாட்டு

'எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்' படத்தை வெளியிட்ட வகையில் வெங்கடேஷ்ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கினார் வனிதா விஜயகுமார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் வெங்கடேஷ்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பது: "நான் கடந்த ஒரு வருடமாக தி வைப்ரண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கடந்த 13/4/2015 அன்று Vanitha Film Production நிறுவனத்தின் ஒனராகிய வனிதா என்னிடம் "MGR SIVAJI RAJINI KAMAL RASIKARKAL NARPANIMANRAM" என்ற திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு உதவுமாறு கேட்டார். மேற்படி படத்தை பற்றி விசாரித்ததில் இப்படத்தை வெளியிட பல்வேறு நிறுவனங்கள் மறுத்துவிட்டது என்பதையும் தெரிந்துகொண்டேன்.

நான் உடனே படத்தை திரையிட்டு காட்டுமாறு கூறினேன். உடனே வனிதா படம் நன்றாக வந்துள்ளது என்றும், திரைப்படத்தை திரையிட கால அவகாசம் இல்லை என்றும் கூறிவிட்டு படத்தை வெளியிட உதவு செய்யுமாறு கெஞ்சி கேட்டார். மேலும் வெளியிடுவதற்கு ஆகும் மொத்த செலவையும் தானே தந்து விடுவதாக கூறினார். உடனே நான் வனிதாவுடன் 20/4/2015 அன்று முறைப்படி ஒப்பந்தம் செய்து மேற்படி படத்தை வெளியிடுவதற்கு சம்மதித்தேன்.

எங்களுடைய ஒப்பந்தத்தின்படி வனிதா 21/4/2015 அன்று 10 லட்சத்து ஒரு ரூபாயை காசோலையாக (காசோலை எண்:119401) கொடுத்துவிட்டு மீதி பணத்தை ரிலீஸ்க்கு முன்பாக தந்துவிடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையின் பேரில் என்னிடம் இருந்த பணத்தை செலவழித்து மேற்படி படம் ரிலீஸ் ஆவதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்தேன். கடந்த 7.5.2015 அன்று காலை 10 மணிக்கு படம் ரிலீஸாக Lab Clearance Certificate-ஐ வனிதாவிடம் கேட்ட போது 1 மணி நேரத்தில் தருவதாக கூறினார். ஆனால், மிகவும் தாமதமாக 8.5.2015 அன்று அதிகாலை 1 மணிஅளவில் தான் தந்தார். மேலும் நான் செலவழித்த மீதி பணத்தை கேட்டதற்கு ஒரிரு நாளில் தந்துவிடுவதாக வனிதா கூறினார். நான் அந்த வாக்குறுதியை நம்பி QUBE-ல் படம் ரிலீஸ் ஆவதற்கு உடனே ஏற்பாடு செய்து படத்தை ரிலீஸ் செய்தேன்.

இதுவரை மேற்படி படத்திற்கு சுமார் 16 லட்ச ரூபாய் செலவழித்துள்ளேன். அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. மீதி பணத்தை 8/5/2015 அன்று வனிதாவிடம் கேட்டபோது அவர் கொடுக்க முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய் என தகாத வார்த்தைகளால் பேசி உன்னை சினிமாவிலிருந்தே காலி பண்ணிவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பத்திரிகைகளில் எனது மீதும் எனது நிறுவனம் மீதும் தவறான தகவல் அளித்து பேட்டி கொடுத்துள்ளார். எங்களது நிறுவனம் சிறு சிறு படங்களை வெளியிட்டு முன்னேறிவரும் நிறுவனம் ஆகும். எங்களது முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் வனிதா நடந்து கொள்கிறார். எனது மீதும் எனது நிறுவனம் மீதும் அவதூறாக பேசிவருகிறார்.

எனவே வனிதா மீது குற்ற நடவடிக்கை எடுத்து நான் செலவழித்த பணத்தில் அட்வான்ஸ் தொகை போக மீதி 6 லட்சம் ரூபாயை வனிதாவிடம் இருந்து மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x