

ஊதிய உயர்வு கோரி என்.எல்.சி. தொழிற்சங்கத்தினர் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை மண்டல மேலாளர் எம்.மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
என்.எல்.சி. நிறுவனத்தில் 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மூலம் தமிழக மின்வாரியத்துக்கு தேவையான 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. என்.எல்.சி. தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், என்.எல்.சி. அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கம் ஆகிய இரு சங்கங்கள் 61.3 சதவீதம் ஓட்டுகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக உள்ளன. இந்த இரு சங்கங்கள் உட்பட 10 சங்கங்கள் ஊதிய உயர்வு தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்துடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தின. இறுதியாக கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில், மே 14-ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பொதுவாக, வேலை நிறுத்தம் செய்வது குறித்து குறைந்தது 6 வாரங்களுக்கு முன்போ அல்லது 14 நாட்களுக்கு முன்போ நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அத்துடன், சமரச பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும் நேரத்தில் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது தொழில் தாவா சட்டத்துக்கு எதிரானது. இந்த வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே, இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவித்து தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
4 வாரத்துக்குள் பதில் மனு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தொழிற்சங்கம் மேற்கொள்ள வுள்ள வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மண்டல தொழிலாளர் ஆணையர், தொழிற்சங்கங்களுக்கு உத்தரவிட்டார்.
வேலை நிறுத்தம் செய்வது குறித்து குறைந்தது 6 வாரங்களுக்கு முன்போ அல்லது 14 நாட்களுக்கு முன்போ நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.