

நேவல் ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம் இன்ஜினீயரிங். ஓஷன் இன்ஜினீயரிங், பயோ-மெடிக்கல் டெக்னாலஜி உட்பட 20 புதிய படிப்புகளை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.
இதுதொடர்பாக வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு வேல்ஸ் பல்கலைக் கழகம் புதுமையான படிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம் இன்ஜினீயரிங், பயோ-மெடிக்கல் டெக் னாலஜி, கோஸ்டல் மற்றும் ஓஷன் இன்ஜினீயரிங் உள்பட புதிதாக 20 படிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு படிப்பிலும் தலா 60 பேர் சேர்க்கப்படுவர். இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவு மே 18-ம் தேதி வெளியிடப்படுகிறது. மேற்கண்ட படிப்புகளில் சேரும் சிறந்த மாணவர்களுக்கு டியூஷன் கட்டணச் சலுகை வழங்க முடிவுசெய்துள்ளோம்.
அதன்படி, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்தால் முதல் ஆண்டில் 50 சதவீத கட்டணச் சலுகையும், 90 சதவீதம் முதல் 94.99 சதவீதம் வரை பெற்றால் 40 சதவீதமும், 80 சதவீதம் முதல் 89.99 சதவீதம் வரை பெறுவோருக்கு 25 சதவீதமும் 70 சதவீதம் முதல் 79.99 சதவீதம் வரை எடுத்தால் 10 சதவீதமும் சலுகை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.