சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் தரம் உயர்த்தப்படும்: ரயில்வே அதிகாரி தகவல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் உள்ள சிசிடிவி கேமராக் கள் தரம் உயர்த்தப்படும் என்று சென்னை கோட்ட மண்டல மேலாளர் அனுபமா சர்மா தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வேயின் செயல் பாடுகள், தற்போது நடந்து வரும் திட்டங்கள் குறித்து சென்னை கோட்ட மண்டல மேலாளர் அனுபமா சர்மா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் முக்கிய அங்கமாக இருக்கிறது. பயணிகளின் சேவையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து பேசின்பிரிட்ஜ் வரையில் நடந்து வரும் 5, 6-வது தடம் அமைக்கும் பணிகள் இந்த நிதி ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
கடந்த ஆண்டில் மொத்தம் 1663 சிறப்பு ரயில்கள் இயக் கப்பட்டுள்ளன. பயணிகள் புகார் தெரிவிக்க 138 என்ற உதவி எண் ணும், பாதுகாப்புக்கு 182 என்ற உதவி எண்ணும் தொடங்கப்பட்டுள்ளது. வேளச்சேரி திருவள்ளூர் மார்க் கத்தில் மின்சார சேவை தொடங் கப்பட்டுள்ளது.
தாம்பரம் அரக்கோணம் வரை யில் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. சென்ட்ரலில் விரைவில் மருந்தகம் தொடங்கப்படும். செங்கல்பட்டு விழுப்புரம் வரை யில் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடியவுள்ளது. புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் மூடியுள்ள கழிப்பறைகளைத் திறக்கவும், கட் டமைப்பு பணிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தரம் உயர்த்தப்படும். வேளச்சேரியில் இருந்து பரங்கி மலை வரையில் பறக்கும் ரயில் திட்டத்தை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரட்டூர் - பட்டாபிராம் இடையே 5 ரயில் நிலையங்களிலும், ஏகாட்டூர் - புதியமங்கலம் இடையே 7 ரயில் நிலையங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கப்படும்.
நெமிலிச்சேரி, பெரம்பூர், வஉசி நகர் ஆகிய இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. எழும்பூரில் கூடுதலாக ஒரு காத்திருப்போர் அறையும், மாம்பலத்தில் ஒரு காத்திருப்போர் அறையும் அமைக்கப்படும். மூர்மார்க்கெட் ரயில்நிலைய வளாகத்தில் புதியதாக கழிப்பறை அமைக்கப்படும். பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி, பெரம்பூர், வில்லி வாக்கம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடைகள் விரிவுப்படுத்தப்படும். திருவள்ளூர் அரக்கோணம் இடையே 3-வது தடம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் 8 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கடந்த 2012-ல் நடந்த ரயில் விபத்துகளில் 829 பேரும், 2013-ல் 710 பேரும், 2014-ல் 826 பேரும் இறந்துள்ளனர். அதிகமாக விபத்துகள் நடக்கும் 25 இடங்களை தேர்வு செய்து ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர்கள் அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
