

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல் வதற்கு லிஃப்ட் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்குவது திருச்சி மலைக்கோட்டை. சுமார் 273 அடி உயரம் உள்ள குன்றின் மீது தாயுமானவர் கோயில் மற்றும் அதற்கு மேல் உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன. மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோயில்களுக்குச் செல்ல 417 படிகள் அந்த காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
நகரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும், மலைக்கோட்டையைக் காண முடியும். அதேபோன்று மலைக்கோட்டை மீது ஏறிச் சென்றால் திருச்சி மாநகர், காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்கள் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், வயதானவர்கள், பெண்கள் மலைக்கோட்டை மீது ஏற முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பழநி மலை முருகன் கோயிலில் உள்ளது போன்று பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக மலைக்கோட்டைக்குச் செல்லும் வகையில் இழுவை ரயில் வசதியை ஏற்படுத்த வேண்டுமெனவும், மலைக்கோட்டை முழுவதும் விளக்குகள் அமைக்கவும் தமிழக அரசு கொறடா ஆர்.மனோகரன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, மலைக்கோட்டையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக சுற் றுலாத் துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இருளைப் பகலாக்கி திருச்சி மலைக்கோட்டையை ஒளிரச் செய்ய சக்திவாய்ந்த 93 விளக்கு களை அமைக்க திட்டமிடப்பட்டு, திருச்சி மாநகராட்சி மூலம் இந்த பணியை மேற்கொள்ள தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மேலும், மலைக்கோட்டையின் உயரம் குறைவாக இருப்பதால், விஞ்ச் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என தொடர்புடைய துறை நிபுணர்கள் தெரிவித்த நிலையில், ஒரே நேரத்தில் 20 பேர் செல்லும் வகையில் ராட்சத லிஃப்ட் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் கேட்டபோது, “மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்வதற்கு ராட்சத லிஃப்ட் அமைப்பதற்கான சாத்தியக்கூறு கள், எந்த இடத்தில் அமைப்பது, அதற்கான மதிப்பீடுகள் ஆகியவை குறித்து அறநிலையத் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.