

சதுரகிரி மலைப் பகுதியில் நடந்த விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கு்ற்றம்சாட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில்களுக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.
மலை அடிவாரப் பகுதியான தாணிப் பாறையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் மலையில் உள்ள ஒற்றையடிப் பாதை வழியாகவே நடந்துசென்று வருகின்றனர்.
இதனால், விழாக் காலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் தவிக்கும் நிலையும், நெரிசல் மிகுதியால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், சதுரகிரி மலையில் உள்ள காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: சதுரகிரி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், காட்டாறுகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற ஊகத்தால், தாணிப்பாறையில் கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டு சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனாலும் சிலர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து பிடிவாதமாக தடையை மீறி மலைமேல் ஏறினர். போலீஸார் மற்றும் வனத் துறையினர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சிலர் அதை பொருட்படுத்தாமல் சென்றனர்.
பிற்பகலில் மழை பெய்து கொண்டிருந்த போதே, காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதையடுத்து, சதுரகிரி மலையில் இருந்து யாரும் கீழே இறங்க வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோயி லில் இருந்து யாரும் கீழே இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இடைப் பட்ட நேரத்தில் மலைப் பாதையில் சென்ற பக்தர்களே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர் என்றனர்.
போலீஸார் விரைந்தனர்
காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் சிக்கித் தவிப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பிலிருந்து 200 தீயணைப்பு வீரர்களும், மதுரையிலிருந்து 40 தீயணைப்பு வீரர்களும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிரடிப்படை போலீஸாரும் தாணிப்பாறைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் எல்.சுப்பிரமணி கூறியதாவது: சதுரகிரி மலையில் சங்கிலிப்பள்ளம் மற்றும் குதிரை ஊற்று பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பலரை தீயணைப் புத் துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிவரை 3 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சதுரகிரி மலையில் கோயில் அருகே தங்கவைக்கப்பட்டிருந்த 1050 பக்தர்களும் நேற்று காலை அடிவாரத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர் என்றார்.
மழைக் காலங்களில் சதுரகிரி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டாலும், அதை மீறி பக்தர்கள் செல்வதே இதுபோன்ற அசம் பாவிதங்களுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், சதுரகிரி மலை விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட எல்லைப் பகுதியாக இருப்பதால் இரு மாவட்ட அதிகாரிகளும் பக்தர்கள் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.
கடந்த 1977-ம் ஆண்டில் சதுரகிரி மலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானார் கள். அதைத்தொடர்ந்து, தற்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற உயிரிழப்பு களை தடுக்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
ரோப்கார் திட்டம்
இதற்கிடையில், சதுரகிரி மலையில் ரோப்கார் அமைக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டது. ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பொது மேலாளர் சோமசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடந்த செப்டம்பரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அதன்பின்னர் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.