

பெட்ரோல், டீசல் விலை நேற்று முன்தினம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் விவரம்:
பாமக நிறுவனர் ராமதாஸ்:
ஒரே மாதத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது கலால் வரியை உயர்த்தி, அதன் பலனை தானே அனுபவிக்கும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும்போது மட்டும் அதை பொதுமக்கள் மீது சுமத்துகிறது. எண்ணெய் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்த விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, விலை நிர்ணய உரிமையை மத்திய அரசே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
15 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் விலைவாசி அதிகரித்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
மோடி அரசு பொறுப்பேற்றது முதல் 4 முறை வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் மீதான வரி முறையே ரூ.18.01 மற்றும் ரூ.10.82 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் உண்டாகும் பலன் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 42 சதவீதம் அளவுக்கு விலைவாசி உயர்ந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சமக தலைவர் சரத்குமார்:
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகளை போல எண்ணெய் நிறுவனங்கள் மக்களைக் கொள்ளையடிப்பது நிரூபணம் ஆகியுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். அடித்தட்டு மக்களை அலட்சியப்படுத்தினால், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு நேர்ந்த கதிதான் பாஜக அரசுக்கும் நேரும்.
மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன்:
இப்படி மாதம் இருமுறை விலையை மாற்றி அமைப்பதற்கு பதிலாக வருடம் இருமுறை விலை நிர்ணயம் செய்யலாம்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்:
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கொங்கு ஜனநாயக கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ்:
பெட் ரோல், டீசல் விலையின் நிச்சயமற்றத் தன்மையால் சிறு, குறு தொழில்முனைவோர், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.