Published : 08 May 2015 07:23 AM
Last Updated : 08 May 2015 07:23 AM

காங்கிரஸ் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தினம் ஓர் ஊழல் புகாரை வெளியிடுவோம்: இளங்கோவன் அறிவிப்பு

அதிமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகார் மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தினம் ஒரு ஊழல் புகாரை ஆதாரங்களுடன் வெளியிட இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகாலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் ஆளுநர் கே.ரோசய்யாவிடம் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தோம். அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இன்னும் 2 வாரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தினம் ஒரு ஊழல் குற்றசாட்டை ஆதாரங்களுடன் வெளியிடுவோம்.

ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் மேடையில் பேசுகிறார்கள். பலர் ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர். சிலர் கடிதம் எழுதுகின்றனர். அது அவரவர் விருப்பம். எனவே, திமுக பாமக இடையே நடைபெறும் கடித அரசியலில் நான் தலையிட விரும்பவில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் மற்ற கட்சித் தலைவர்களை என்ன நோக்கத்துக்காக சந்திக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழக அரசின் செயலற்ற தன்மையை, ஊழலை எதிர்க்கட்சிகள் இப்போது பேச முன் வந்திருப்பதும், அதற்காக மற்றவர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்கது.

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமையில் விவசாயிகள் என்னை சந்தித்து தங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். நாட்டில் கரும்பு விளைச்சல் அபரிமிதமாக இருந்தாலும், கரும்பு விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கரும்பு விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமானால் கரும்புக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 3,500 வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x