

ஹரித்துவாரில் கங்கை கரையோரம் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்று தருண் விஜய் எம்பி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
நான் கடந்த ஜனவரி மாதம் முதல் திருவள்ளுவர் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதன் மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் இளைஞர்களைச் சந்தித்து வருகிறேன். எல்லா செல்வத்தையும் விட கல்விச் செல்வம்தான் சிறந்தது என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 50 மாணவர்களை தேர்வு செய்து உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியில் இலவசமாக படிக்க வைக்கவுள்ளேன்.
ஹரித்துவாரில் கங்கை கரையோரம் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க உத்தரகண்ட் மாநில ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். என் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சிலை அமைக்க இடத்தை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இடம் தேர்வானதும் அங்கு 5 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.