அரசு நிதியை எதிர்பார்க்காமல் குளத்தை தூர்வார களம் இறங்கிய இளைஞர்கள்

அரசு நிதியை எதிர்பார்க்காமல் குளத்தை தூர்வார களம் இறங்கிய இளைஞர்கள்

Published on

நாமக்கல் அருகே அரசு நிதியை எதிர்பார்க்காமல் மக்களிடம் பணம் வசூலித்து, ஊர் குளத்தை தூர்வாரும் பணியில் இளைஞர்கள் களம் இறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்டது நல்லிபாளையம். இங்குள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் (நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலை அருகே) குளம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த குளம் அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாகவும், இப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக இருந்தது.

தற்போது இக்குளத்துக்கு நீர் வரும் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளதால், குளம் வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிப்பதோடு, இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சங்கமிக்கும் இடமாக மாறிப்போனது.

தூர்ந்த நிலையில் உள்ள இக்குளத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்கான நிதியை அரசிடம் இருந்து எதிர்பார்காமல் மக்களிடம் திரட்டிவும் திட்டமிட்டனர். இதற்காக, அப்பகுதி இளைஞர்கள் ‘பசுமை விழுதுகள்’ என்ற இயக்கத்தை தொடங்கி மக்களிடம் நிதி வசூலித்தனர்.

நேற்று குளம் தூர் வரும் பணி தொடக்க விழா நடந்தது. ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார். ,மேலும், இளைஞர்களின் இந்த முயற்சியை அவர் பாராட்டினார்.

இதுகுறித்து பசுமை விழுதுகள் இயக்க நிர்வாகிகள் பி.நந்தகுமார், கே.ராஜ்குமார், ஆர்.அருண், எம்.வினோத் ஆகியோர் கூறியதாவது:

இந்த குளத்தில் ஒருகாலத்தில் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஏலமும் விடப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டது. குளத்துக்கு நீர் வரும் ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீட்டுமனைகளாக மாறிப்போனது. இதனால், குளத்துக்கு நீர் வருவது தடைபட்டது.

இந்த குளத்தை ஆழப்படுத்துவதுடன், கரையும் பலப்படுத்தப்படும். பெரும் பள்ளம் தோண்டி கழிவுநீரும் இங்கு சேகரிக்கப்படும். நகராட்சி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் இதை சுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர். எங்களது முயற்சிக்கு நகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றார்.

அரசு நிதியை எதிர்பார்க்காமல் குளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பசுமை விழுதுகள் இளைஞர்களின் பணியை அப்பகுதி மக்களும், அரசு அதிகாரிகளும் ஊக்கப்படுத்தி, பாராட்டி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in