Last Updated : 20 May, 2015 08:05 AM

 

Published : 20 May 2015 08:05 AM
Last Updated : 20 May 2015 08:05 AM

நிலையான ஆட்சி அமைப்பேன் - திமுக தலைவர் கருணாநிதி பேச்சால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் சுணக்கம்

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய மக்கள் தோள் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி பேசியிருப்பது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தையும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் சற்று சுணக்கத் தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையின் இசை விழாவை நேற்று முன்தினம் தொடங்கிவைத்த கருணாநிதி, ‘‘தமிழகத்தில் சாதாரண மக்கள், சாமானிய மக்கள், பாடுபட்டு சம்பாதிக்கும் பாட்டாளி மக்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள், பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எல்லோரையும் ஒன்றுசேர்த்து நாம் போராடினால், வியூகம் வகுத்தால் அது நிச்சயம் வெற்றி பெறும். ஒருவகையில் இது தேர்தல் பேச்சுதான். தமிழனை தேறுதல்படுத்தும் பேச்சு. 92-வது வயதில் உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் 8 ஆண்டுகளில் 100 வயது. அந்த நூற்றாண்டு விழாவை உங்களோடு கொண்டாடுவேன். அப்போது என் தளர்ச்சியைப் போக்க எனக்கு உணர்ச்சியை வழங்க உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய, அப்படி அமைகின்ற ஆட்சிக்கு தமிழக மக்கள் எல்லாம் தோள் கொடுக்கின்ற அளவுக்கு வலிமை பெற, அந்த படையைத் திரட்டுவோம். அந்த பணியைத் தொடருவோம்’’ என்றார்.

இது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யிலும், கருணாநிதியின் முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. நிலையான ஆட்சி அமைப்பேன் என்று கருணாநிதி உரை நிகழ்த்தியது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதியே முதன்மையான தலைவர். கட்சித் தொண்டர் களுக்கு அவரது சொல்லே வேதவாக்கு. ஆனாலும் கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஸ்டாலின் அதிகம் முன்னிறுத்தப் பட்டார். வேட்பாளர் தேர்வு முதல் அனைத்தையும் அவரே முடிவு செய்தார். தேர்தலுக்குப் பிறகு முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் ஸ்டாலின் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இளம் தொண்டர்கள் ஒருபடி மேலே சென்று, Thalapathy For CM என்ற முகநூல் பக்கத்தை தொடங்கி ஸ்டாலினை அடுத்த முதல்வராகவே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த பக்கத்தில் இதுவரை 1 லட்சம் பேர் இணைந்துள்ளனர். ‘அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்’ என்ற எண்ணத் தில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், 100 வயது வரை தானே தொடர்ந்து தலைவர் என்ற தொனியில் கருணாநிதி பேசியது, இளம் தொண்டர்கள் மற்றும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x