

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரசாயன ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக காரைக்குடியில் கடைகள் சேதப்படுத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே கோவி லூரில் தனியார் ரசாயன தொழிற் சாலை உள்ளது. இங்கு சோடியம் ஹைட்ரோ சல்பைடு எனும் வேதிப்பொருள் தயாரிக்கப் படுகிறது.
இந்த ஆலையில் கடந்த பிப்.12-ம் தேதி வாயு கசிவால் கோவிலூர் பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவாகி பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்தக் கிராம மக்கள் ஆலையை முற்றுகையிட்டு நிரந்தரமாக மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், 3 மாத கால சோதனைக்குப் பிறகு ஆலையை இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஆலை செயல்பாட்டை நிறுத்தி வைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
முற்றுகை போராட்டம்
3 மாதங்கள் முடிந்த நிலையில் நேற்று சோதனை முறையில் ஆலை இயக்கப் பட்டது. இதனை அறிந்த கோவிலூர், குன்றக்குடி பகுதி களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள், ஆலையை இயக்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்று கையிட்டனர்.
இவர்களுடன், தேவகோட்டை ஆர்.டி.ஓ. சிதம்பரம், ஏடிஎஸ்பி ராஜாராமன், வட்டாட்சியர் கருணா கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை ஏற்காத கிராம மக்கள் மதுரை- காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப் படைந்தது
கிராம மக்கள் கைது
மறியல் செய்த 300-க்கும் மேற் பட்ட கிராம மக்களை குன்றக்குடி போலீஸார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆலையை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கிராம மக்களுக்கு ஆதரவு தெரி விக்கும் வகையிலும் நேற்று காரைக் குடி செக்காலை வீதியில் உள்ள கடைகளை உடைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்ணாடிகள் உடைந்தன. இத னால், காரைக்குடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் அலறி யடித்து ஓடினர். கடைகளை உடைத்ததாக 7 பேரை காரைக் குடி டி.எஸ்.பி. முத்தமிழ் தலை மையிலான போலீஸார் கைது செய்தனர்.