

மாசடைந்த குளத்தை தூர்வாரி பராமரிக்க பஞ்சாயத்து, மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் எட்டு கிராம மக்கள் ஒன்று திரண்டு குளத்தை தாங்களே தூர்வாரி சுத்தம் செய்தனர்.
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மந்தைகுளம், கடந்த காலத்தில் சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. அப்போது ஏராளமான மீன்கள் குளத்தில் வளர்க்கப்பட்டன. கால்நடைகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக குளம் இருந்துள்ளது.
நாளடைவில் இப்பகுதியில் பெருகிய தனியார் நிறுவனங்கள், கழிவுநீரை இந்த குளத்தில் விட்டன. போதாக்குறைக்கு இறைச்சிக் கழிவுகள், குப்பைகளும் அதிகளவு குளத்தில் கொட்டப்பட்டன. இதனால் மந்தைக் குளம் முற்றிலும் மாசடைந்து துர்நாற்றம் வீசியது.
குளம் வறண்டதால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீராதாரமும் குறைந்துவிட்டது.
இதையடுத்து கிராம மக்கள் குளத்தை தூர்வாரக்கோரி பஞ்சாயத்து நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஆனால், அதிகாரிகள் குளத்தைத் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
அதனால் செட்டிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, ராஜக்காபட்டி, காமாட்சிபுரம் உள்ளிட்ட 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு, குளத்தில் இருந்த முட்செடி, புதர்களை வெட்டி நேற்று அகற்றினர். ஆண்கள், பெண்கள் அனைவரும் இப்பணியில் பாரபட்சமின்றி ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குளங்களே கிராமங்களின் குடிநீர் ஆதாரம். குளங்களை தூர்வார அரசு அதிக அளவு நிதி ஒதுக்குகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம், இந்தக் குளத்தை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளித்தது. அதனால், இனியும் அதிகாரிகளை நம்பி பலனில்லை என்பதால், நாங்களே தூர்வாருகிறோம் என்றனர்.