

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஓராண்டு செய்த தவறுகளை மக்களிடம் விளக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் மே 20-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளனர்.
மோடி அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாட பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, வரும் 20-ம் தேதி சென்னை வருகிறார். அவரைத் தொடர்ந்து 22-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் சென்னை வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கும் இவர்கள், கடந்த ஓராண்டில் பாஜக அரசு மேற்கொண்ட தவ றான நடவடிக்கைகள், மக்கள் விரோத திட்டங்கள் குறித்து விளக்குவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
பேச்சாளர்களுக்கு காப்பீடு
காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25-வது நினைவு நாளை முன்னிட்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஆண்டு மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் பலியான சுவாதியின் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 140 பேச்சாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அதற்கான பிரீமியத் தொகையை கட்சியே ஏற்கும்’’ என்றார்.