

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
சென்னை மாநகராட்சி மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், ‘அம்மா’ திரையரங்குகள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. இதனால், சென்னை முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதையும் செய்யக்கூடாது.
எனவே, நேற்று நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. வயது முதிர்வு காரணமாக வெவ்வேறு துறையில் ஓய்வு பெறுபவர்கள் மற்றும் தான பத்திரம் குறித்த 18 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
மாநகராட்சி மன்றக் கூட்டம் தொடங்கும்போதே, இதை மேயர் சைதை துரைசாமி அறிவித்துவிட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து மேயர் பேசினார். அவரைத் தொடர்ந்து துணை மேயர் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினர்.
அப்போது திமுக உறுப்பினர்கள் சுபாஷ் சந்திர போஸ், நீலகண்டன் உள்ளிட்டோர் எழுந்து, ‘மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்கிறோம்’ என்று கூறி விட்டு மன்றத்தில் இருந்து வெளியேறினர்.
ஜெயலலிதா முதல்வரானதை யொட்டி அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ரிப்பன் மாளிகையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.