தமிழகம் முழுவதும் மேலும் 201 ‘அம்மா’ உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

தமிழகம் முழுவதும் மேலும் 201 ‘அம்மா’ உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
Updated on
2 min read

குறைந்த விலை துவரம் பருப்பு, உளுந்து விற்பனையும் தொடக்கம்

தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 201 ‘அம்மா’ உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார். மேலும், 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளிலும் கையெழுத்திட்டார். குறைந்த விலையில் துவரம் பருப்பு மற்றும் உளுந்து விற்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வராக 5-வது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்ற ஜெயலலிதா, நேற்று முதல்முறையாக தலைமைச் செயலகம் வந்தார். பிற்பகல் 3 மணி அளவில் வந்த முதல்வரை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உளவுப்பிரிவு ஐஜி கண்ணப்பன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சட்டப்பேரவை கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 201 ‘அம்மா’ உணவகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. முதலாவதாக, காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சி சார்பில் ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ உணவகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி யில் 45, கோவை, மதுரை, தஞ் சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி களில் 4, நகராட்சிகளில் 128, மாவட்ட தலைநகர்களில் உள்ள அரசு பொதுமருத்துவமனைகளில் 23 என மொத்தம் 201 ‘அம்மா’ உண வகங்களையும் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.

புதிய விற்பனை திட்டம்

குறைந்த விலையில் துவரம் பருப்பு மற்றும் உளுந்து விற்கும் திட்டத்தையும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED), சென்னை - தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (NCCF) வாயி லாக தரமான துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 25 விற்பனை மையங்களில் குறைந்த விலையில் விற்கப்படும்.

இத்திட்டத்தில் அரை கிலோ துவரம் பருப்பு ரூ.53.50-க்கும் (சந்தை விலை ரூ.58.55) உளுத்தம் பருப்பு ‘ஏ’ ரகம் ரூ.56-க்கும் (சந்தை விலை ரூ.62), ‘பி’ ரகம் ரூ.49.50-க்கும் (சந்தை விலை ரூ.60.60) விற்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், துறை செயலர்கள் நசிமுதீன், பனீந்திர ரெட்டி, சென்னை மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர், பிற்பகல் 3.55 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் கையெழுத்திட்ட 5 புதிய திட்டங்கள்

# நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டு சிறப்புத் திட்டம்:

நகர்ப்புறங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல் ஆகிய பணிகளின்போதும் மழையாலும் பழுதடைந்த சாலைகள் ரூ.1000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

# தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்:

ஊரக சாலைகளை மேம்படுத்த ‘தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற விரிவான திட்டத்தை ரூ.800 கோடியில் செயல்படுத்தப்படும். 3,500 கி.மீ. நீள சாலைகள் இந்த நிதியாண்டில் மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

# பேரூராட்சி பகுதிகளில் வீட்டு வசதித் திட்டம்:

பேரூராட்சிகளில் மண்சுவர் மற்றும் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் வகையில், சூரிய மின்சக்தியுடன் கூடிய கான்கிரீட் கூரை கொண்ட பசுமை வீடுகளாக மாற்றியமைக்க குடும்பம் ஒன்றுக்கு ரூ.2.10 லட்சம் நிதியுதவி வழங்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்கட்டமாக 20 ஆயிரம் குடும் பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

# எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்குதல்:

குடிநீர் பற்றாக்குறை உள்ள 30 பேரூராட்சிகள், அம்மா உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் ரூ.77.13 கோடியில் 1,274 எதிர்மறை சவ்வூடு நிலையங்களை அமைத்து குடிநீர் வழங்கப்படும்.

# மகளிரை குடும்பத் தலைவராக கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம்:

குடும்பத் தலைவி அல்லது குடும்பத்தில் உள்ள 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் அல்லது பெண் உறுப்பினர் இத்திட்டத்தில் பயனாளி ஆவர். இவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தனிநபர் அல்லது கூட்டாக தொழில் செய்ய வட்டி மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 ஆண்டுகளி்ல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.750 கோடி ஆகும். நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in