Published : 01 May 2014 08:28 AM
Last Updated : 01 May 2014 08:28 AM

சென்னை சென்ட்ரலில் பயங்கரம்: 2 குண்டுகள் வெடித்து பெண் பலி

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் பெண் பலியானார்; 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

அப்போது, தூங்கும் வசதி கொண்ட எஸ்-5 பெட்டியில் 30-ம் எண் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டி ருந்த குண்டு காலை 7.15 மணியளவில் வெடித்தது. அடுத்த சில நொடிகளிலேயே எஸ்-4 பெட்டியில் 70-ம் எண் சீட்டுக்கு அடியிலிருந்து மற்றொரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. குண்டுகள் வெடித்த ரயில் பெட்டியின் அடிப்பாகத்தில் பெரிய ஓட்டைகள் ஏற்பட்டன. ரயில் இருக்கைகள் தூள், தூளாக சிதறிப் போயின. குண்டுகள் வெடித்த வேகத்தில் ரயில் கூரை பிய்ந்தது. பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியது. இதில் 70-ம் எண் சீட்டில் அமர்ந்திருந்த ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி (24) என்ற பெண் பொறியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாளம் தெரியாத ஒருவரும், சுமந்தோ தேவ்நாத் (37) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.

சாய்ப்புல் ஹக்(27), ஆஞ்சநேயா(29), விமல்குமார் தாஸ்(43), சாகுன்குமார் ராய்(43), அல்தாப்கான்(17), உமா(35), ஜிதேந் திரா(58), சாரி(21), முரளி(27), சுதன்சந்த் தேவ்நாத்(64), சுரேந்திரா வர்மா(31), பிஜாய் குமார் (14) ஆகி யோர் லேசான காயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் என்ன நடந்தது என்பதை உணர்ந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது. பலர் பயந்து ஓட்டம் பிடித்த நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு சிலர் உதவ ஆரம்பித்தனர். காயம் அடைந் தவர்கள் அனைவரும் சென்ட்ரல் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரயில்வே ஐஜி சீமா அகர்வால் உட்பட 500 போலீஸார் சென்ட்ரலில் குவிந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலம் ரயில் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர். போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐஜி) விசாரிக்க டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள தகவல் மையம் அமைக்கப் பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படும். இங்கு விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044 25357398.

டைம்பாமா? ரிமோட் குண்டா?

ரயில் பெட்டிகளில் குண்டு வைக்கப்பட்டது, வெடித்தது குறித்து தமிழக போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் இரு வேறு விதமான தகவல்களை கூறுகின்றனர்.

“ரயிலில் வைக்கப்பட்ட குண்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட 'டைம்பாம்' வகையை சேர்ந்தது. ரயில் பெங்களூரில் இருந்து புறப்படும்போதே எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டனர். காலை 7.15 மணிக்கு வெடிக்கும் வகையில் நேரத்தையும் செட் செய்து வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்ட குண்டுகள்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்துள்ளன” என்று தமிழக போலீஸார் கூறுகின்றனர்.

ஆனால் ரயில்வே போலீஸார், "இரு குண்டுகளும் ரிமோட் மூலம் இயக்கப்படும் வகையைச் சேர்ந்தவை. ரயில் சென்ட்ரல் வந்து நின்றதும், அதில் ஏறி 2 குண்டுகளையும் வைத்து விட்டு, பாதுகாப்பான தூரத்தில் நின்று அவற்றை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர்" என்றனர்.

மோடிக்கு விடுத்த மிரட்டலா?

ரயில் காலை 5.40-க்கு சென்ட்ரல் வந்திருக்கவேண்டும். 1 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக வந்துள் ளது. சரியான நேரத்துக்கு வந்து சென்றிருந்தால் காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலை யத்துக்கு சென்றிருக்க வேண்டும்.

திருப்பதிக்கு மிக அருகே உள்ள ரயில் நிலையம் கூடூர். வியாழக்கிழமை திருப்பதிக்கு வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ. உதவி தேவையில்லை: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவி தேவையில்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஹைதராபாதில் இருந்து என்.ஐ.ஏ. குழுவினரும் டெல்லியில் இருந்து என்.எஸ்.ஜி. குழுவினரும் சென்னைக்கு புறப்படத் தயாராகினர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசு தொடர்புடையது, இதில் மத்திய அரசின் உதவி தேவையில்லை, எத்தகைய சூழ்நிலையையும் கையாளும் திறன் தமிழக போலீஸுக்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறிவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.), தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) மற்றும் மத்திய தடயவியல் நிபுணர்களை சென்னைக்கு அனுப்பிவைப்பதை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்சுவாமி கூறியபோது, தமிழக அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது, தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட குண்டு

ரயிலில் வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து வெடிமருந்துகளை தமிழக காவல் துறையினர் சேகரித்து உடனடியாக சோதனை நடத்தினர். அதில், அம்மோனியம் நைட்ரேட், சல்பர் ஆகியவை இருந்தது தெரிந்தது. இவை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருட்கள் என்பதால், இந்த குண்டுகளை தமிழகத்திலேயே தயாரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

108 ஆம்புலன்சின் முதல் அனுபவம்

தமிழகத்தில் 2008-ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பல வகையான விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெடிகுண்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தது இதுவே முதல்முறை.

குண்டு வைத்தவர் சிக்கினார்?

குண்டு வெடிப்பு குறித்து பெங்களூர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், பெங்களூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, அகமது (27) என்பவரின் விவரங்களை தமிழக போலீஸாருக்கு கொடுக்க, சென்னை விமான நிலையம் அருகே பதுங்கி இருந்த அகமதுவை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் ரயிலில் குண்டு வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸார் இதை உறுதி செய்யவில்லை. மேலும், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த முகமது என்பவர் உட்பட 5 பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயம் கிடைத்துள்ளது: ரயில்வே பொது மேலாளர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான தடயம் கிடைத்துள்ளது என்று சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 14 பேருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோரை பார்வையிட்ட பிறகு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இச்சம்பவத்தில் பலியான சுவாதியின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 14 பேருக்கும் ரயில்வே அதிகாரிகள் ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கினார்கள். குண்டுவெடிப்பில் இருவர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

படம் எடுத்தவரும், பதுங்கி இருந்தவரும் யார்?

குண்டு வெடிப்பு நடந்த பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குண்டு வெடிப்பு நடந்த பெட்டிகளைச் சுற்றி ஒருவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் ரயிலில் பயணம் செய்வதற்கான எந்த டிக்கெட்டும் இல்லை. “சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதற்காக வந்தீர்கள், எதற்கு படம் எடுத்தீர்கள்” என போலீஸார் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதில் கூற முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்பு நடந்த பெட்டியில் பிஹாரை சேர்ந்த இளைஞர் ஒரு ஓரத்தில் பதுங்கி இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் எதற்காக சென்னை வந்தார் என்பதையே அவரால் கூற முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவரிடமும் தீவிர விசாரணை நடந்தது.

ஜாஹீர் உசேன் கைதுக்கு எதிரான மிரட்டலா?

இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐ உளவாளி ஜாஹீர் உசேன் சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலைகளைச் செய்ய இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர்களின் ஆதரவுடன் சென்னைக்கு வந்த ஜாஹீர் கைது செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே, அவனது கூட்டாளிகள் ரயிலில் இரட்டை குண்டு வெடிப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படியானால் சென்னையில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஆதரவு தீவிரவாதிகளிடம் இந்த வெடிகுண்டுகள் தயார் நிலையில் இருந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். ஜாஹீர் உசேன் கூட்டாளிகளிடம் மேலும் இது போன்ற வெடி குண்டுகள் பல இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜாஹீர் உசேனை விடுவிக்கக்கோரி, தமிழக போலீஸாருக்கு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலமாகவும், மறைமுகமாகவும் மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, பேச மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x