Published : 19 May 2015 07:40 AM
Last Updated : 19 May 2015 07:40 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தம்பதி உட்பட 5 பேர் பலி

காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட களில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் தம்பதி உட்பட 5 பேர் பலியாகினர். 7 பேர் காயம் அடைந்தனர்.

லாரி மீது மோதிய கார்

சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் சந்த் என்பவரின் மகன் ராகேஷ் (42). இவருடைய மனைவி வினிதா (39). இவர்களது மகன் மன்னன் (16), மகள் விஜி (14). அனைவரும் குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு காரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டி ருந்தனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்த கோரிமேடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில், கணவன், மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரிலிருந்த சிறுவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

சுங்குவார் சத்திரம் போலீஸார் அவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.உடல்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அரசுப் பேருந்து கவிழ்ந்தது

புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பேருந்து, பயணிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை தாண்ட வராயன் ஓட்டினார். சீக்கானாங்குப்பம் பகுதியில், எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட முயற்சித்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, அருகிலிருந்து பள்ளத் தில் கவிழ்ந்தது.

இதில், பேருந்தில் பயணித்த கடப்பாக்கத்தைச் சேர்ந்த தினகரன் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ராம்கி (22), சுரேஷ் (24), ஜான்சன் (25), ஆகிய 3 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். கூவத்தூர் போலீஸார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாய்,மகன் பலி

சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(45). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி ஜெயபாரதி(41), மகன் சரவணகுமார்(15), மகள் அனு(11) ஆகியோருடன் காரில் திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே முருகம்பட்டு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக, சாலை தடுப்பு சுவர் மீது பயங்கரமாக கார் மோதியது. இதில், தடுப்புச் சுவரின் கம்பி குத்தி கிழித்ததில் ஜெயபாரதி அதே இடத்திலேயே உயிரிழந்தார். சரவணக்குமார், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உடல் கரை ஒதுங்கியது

ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசராவ் மகன் அகில்(19). சென்னையில் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்து வந்தார். நண்பர்களுடன் மாமல்லபுரம் கடலில் குளித்தார். அப்போது, அலையில் சிக்கி மாயமானார். இந்நிலையில் அவரது சடலம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் நேற்று கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x