

நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
நகர்ப்புற பசுமை திட்டங்கள் தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூய்மையான காற்று எனது உரிமை என்ற திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைள் குறித்து தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கையில் அரசினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆய்வு நடத்த வேண்டும். மேலும், நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அரசுகள் தீவிரவாதத்தை ஒழிக்க உதவி கோரினால், மத்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும். தீவிரவாதத்தை ஒழிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாகும்.
என்ஜிஒக்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த வங்கிகளில் அதிகளவில் நிதி இருக்கிறது. இதை உரிய முறையில் செலவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.