

தென்பெண்ணை ஆறு செல்லும் 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்பட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் கூறியதாவது: ''தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணை வேகமாக நிரம்பி வருகிறது.
52 அடி கொள்ளளவு அணையில் தற்போது 50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 650 கன அடி நீர்வரத்து உள்ளது.
இதனால் அணை மதகுகள் வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் தென்பெண்ணை ஆறு செல்லும் தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் கூறியுள்ளார்.