

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடந்தால் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்று கட்சித் தலைவர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினர் வெற்றிவேல் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்தத் தொகுதியில் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்தத் தொகுதியில் போட்டியிடு வார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, வெற்றிவேல் ராஜினாமாவைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவின் செல்வாக்கு, கடந்த தேர்தல்களில் வெற்றி, தோல்வி எப்படி இருந்தது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக சார்பில் பி.கே.சேகர் பாபுவை வேட்பாளராக நிறுத்த தலைமை விரும்புகிறது. ஆனால், அவருக்கு அதில் உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது.