

சென்னை நொளம்பூரில் குப்பை கொட்டுவதற்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை, நொளம்பூரைச் சேர்ந்த வி.பிரபாகரன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், “நொளம்பூரில் கூவம் ஆற்றங்கரையோரம் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்படுவ தால் கூவம் ஆறு மாசுபடுகிறது. அதனால் அந்த இடத்தில் மாநக ராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்” என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது, “நொளம்பூரில் நிரந்தரமாக குப்பை கொட்டுவ தில்லை, அங்கு குப்பைகள் சிறு வாகனங்களில் கொட்டப்பட்டு, அவை அனைத்தும் பெரிய வாகனங்களில் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாற்று இடத்தை தேர்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என்று மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
விசாரணை ஒத்திவைப்பு
இதைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள், “அடுத்த விசாரணை யின்போது மாற்று இடத்தை தேர்வு செய்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நொளம்பூரில் கொட்டப்படும் குப்பைகளை 3 மணி நேரத்துக்குள் அள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.