

சென்னை ஐஐடியில் செயல்பட்டுவந்த ‘அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்’ என்ற மாணவர் அமைப்பைத் தடைசெய்து ஐஐடி நிர்வாகம் ஆணை பிறப்பித்திருக்கிறது. இது மாணவர்களின் கருத்துரிமைக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை ஐஐடியில் செயல்பட்டுவந்த ‘அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்’ என்ற மாணவர் அமைப்பைத் தடைசெய்து ஐஐடி நிர்வாகம் ஆணை பிறப்பித்திருக்கிறது.
மாட்டு இறைச்சி உண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து அந்த அமைப்பின் மாணவர்கள் விமர்சித்ததாக யாரோ எழுதிய புகாரின் அடிப்படையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட மாணவர்களிடம் விளக்கம்கூட கேட்காமல் இப்படித் தடை விதிக்கப்பட்டிருப்பது மாணவர்களின் கருத்துரிமைக்கு எதிரானதாகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சென்னை ஐஐடி சமூகநீதிக்கு எதிரான ஒரு நிறுவனமாகவே நீணடகாலமாக செயல்பட்டுவருகிறது. அங்கே மாணவர் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை.தப்பித் தவறி சேர்கிற மாணவர்களும் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கிருக்கும் ஆசிரியர்களில் எஸ்சி/எஸ்டி பிரிவினர் ஒரு சதவீதம்கூட இல்லை.இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனாலும்கூட அதன் போக்கு மாறவில்லை.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலவாறாக கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதனால் கடந்த பத்து ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் இந்த நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தாம் வாழும் சமூகம் குறித்து விமர்சனபூர்வமான அறிவைப் பெறவேண்டியது அவசியம். அதற்கு இத்தகைய மாணவர் அமைப்புகளே களங்களாக உள்ளன. இவற்றைத் தடை செய்வது மாணவர்களின் சுதந்திர சிந்தனையைத் தடுப்பதாகவே பொருள்படும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ஐஐடி நிறுவனங்கள் இந்துத்துவ மையங்களாகத்தான் செயல்பட்டுவந்தன. இப்போது அந்தச் சூழல் மேலும் மோசமாகிவிட்டது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆராய்ச்சி அமைப்புகளும் உயர்கல்வி நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் காவிமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது சென்னை ஐஐடியில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு அதன் ஒரு வெளிப்பாடாகும். மதச்சார்பின்மையில் அக்கறைகொண்ட அனைவரும் இதைக் கண்டிக்கவேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.