

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டம் நடைபெற்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரர்கள், இடைத்தரகர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் நடந்த சூதாட்டம் குறித்து அப்போது க்யூ பிரிவு போலீஸ் எஸ்.பி.யாக இருந்த சம்பத்குமார்தான் முதலில் கண்டுபிடித்தார். இந்த வழக்கு குறித்து அவரே முதலில் விசாரணை நடத்தினார். அதன் பின்னரே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் விசாரணை நடத்தியபோது இடைத்தரகர்களுக்கு ஆதரவாக சம்பத்குமார் செயல்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை சிபிசிஐடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சம்பத்குமாருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.