

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், இன்று காலை தொடங்கியே பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இந்தத் தீர்ப்பு குறித்து விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
>#JayaVerdict என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதன்மையாக உள்ளது. இதில், ஆங்கிலத்திலும் தமிழிலும் குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் வெளியான சல்மான் கான் கார் விபத்து வழக்கின் தீர்ப்பு, ஜாமீன் விவகாரங்களை மேற்கோள் காட்டியும் பல்வேறு பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே, தீர்ப்புக்குப் பிந்தைய சாதக - பாதக நிலைகளை சமூக வலைதளவாசிகள் அலசி வருகின்றனர்.
மேலும், கிண்டல் - நையாண்டிப் பதிவுகளின் எண்ணிக்கையும் மலைக்கத்தக்க அளவில் உள்ளன.
உலக அளவில் முதலிடம்
>#JayaVerdict என்ற ஹேஷ்டேக் பிற்பகல் வரை இந்திய அளவில்தான் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்தது. தீர்ப்பு வழங்கிய பின்னர், தொடர்ந்து குறும்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதன் பலனாக, 2.30 மணியளவில் உலக அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது.
இந்த ஹேஷ்டேக்கில் நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட பதிவுகள் வெளியிடப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்பது கவனிக்கத்தக்கது.