

'தமிழக அரசின் அனைத்து விளம்பரங்களிலும் முதலமைச்சராக இல்லாமலேயே ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்று வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு விளம்பரங்களில் அரசியல் ஆதாயத்துக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்களை வெளியிட தடைவிதித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநலன் கருதி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
அரசு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஏற்கெனவே மத்திய அரசு ஆலோசனை கேட்டபோது, தேமுதிக இந்த கருத்தை வலியுறுத்தியது. அதை இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பாகவே தந்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நான் வரவேற்கிறேன்.
மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து விளம்பரங்களை கண்காணிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்க பரிந்துரை செய்துள்ளது பாராட்டுக்குரியது.
தமிழக அரசினுடைய அனைத்து விளம்பரங்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சி, திரையரங்குகளில் செய்யப்படும் விளம்பரங்களிலும் முதலமைச்சராக இல்லாமலேயே ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்று வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
தற்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினை தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உடனடியாக அமல்படுத்தவேண்டும்.
கடந்த 07.01.2015 அன்று கோவையில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியும், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதற்கு வலுசேர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.