Published : 15 May 2015 07:37 AM
Last Updated : 15 May 2015 07:37 AM

குழந்தைக்கு ‘நீதியரசர் குமாரசாமி’ பெயரை சூட்டிய கோவை தம்பதி

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையொட்டி, பல்வேறு வழிகளில் அதிமுகவினர் நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருக்க, கோவை அதிமுக தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘நீதியரசர் குமாரசாமி’ என பெயர் சூட்டியுள்ளனர்.

கோவை உக்கடம், துப்புரவுத் தொழிலாளர் காலனியில் பூ மாரியம்மன் கோயில் அருகே வசிப்பவர்கள் இந்துமதி- விஜயகுமார் தம்பதி. கடந்த 5 நாட்களுக்கு முன் இந்துமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்து இந்துமதி நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

அன்றைய தினம், விஜயகுமார் வீட்டுக்கு வந்த அதிமுகவினர், அவர்களது சம்மதத்துடன் இந்துமதிக்கு பிறந்த குழந்தைக்கு ‘நீதியரசர் குமாரசாமி’ என்று பெயர் சூட்டி, குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்துக் கொண்டாடினர்.

இந்துமதி- விஜயகுமார் தம்பதியினரை அவர்கள் வீட்டில் சந்தித்தோம். ‘குழந்தைக்கு குமாரசாமினு பெயர் வச்சாலும் வச்சோம். இங்கே வந்து கேட்காத ஆளில்லை, பேசாத வாயில்லை. அவ்வளவு ராசியான பெயர்’ என்றனர்.

தொடர்ந்து, இந்துமதி, ‘தி இந்து’-விடம் மேலும் கூறியதாவது:

எனது கணவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளியாக உள்ளார். எங்க வீட்டுக்காரரு, என் மாமனார், மாமியார் எல்லோருமே அதிமுக கட்சிதான். எனக்கு இப்ப பிறந்த குழந்தையோட சேர்த்து 3 குழந்தைகள். முதல் பையன் தர்ஷன், 2-வது பெண் அகிலா, இப்ப பொறந்த 3-வது பையனுக்கு ‘நீதியரசர் குமாரசாமி’ன்னு பெயர் வச்சிருக்கோம்.

ஜெயலலிதா அம்மாவை ரொம்ப காலமா இழுத்தடிச்சிட்டு இருந்த வழக்குல நீதியரசர் குமாரசாமிதான் விடுதலை கொடுத்து தீர்ப்பளிச்சார். அதன் ஞாபகமா எங்க குழந்தைக்கு நீதிபதி பெயரை வைக்கலாம்னு அதிமுககாரங்க எங்ககிட்ட ஒப்புதல் கேட்டாங்க. உடனே மறுக்காம சரின்னு சொல்லிட்டோம். அவங்களும் கூட்டமா வந்து குழந்தைக்கு பேரு வச்சு, 500 மி.கிராம் தங்க மோதிரத்தையும் குழந்தைக்கு போட்டுவிட்டு போயிட்டாங்க. அப்ப இருந்து இப்ப வரைக்கும் குழந்தைய நிறைய பேரு வந்து பார்த்துட்டு வாழ்த்திட்டு போறாங்க’ என்றார்.

குமாரசாமின்னு பேரு வச்சது உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா? என்று கேட்டபோது, ‘என்ன வெறுமனே குமாரசாமின்னு சொல்றீங்க! நீதியரசர் குமாரசாமின்னு சொல்லுங்க’ என்று திருத்தினார்கள் அவர்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர் சந்திரனிடம் கருத்துக் கேட்க முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து இப்பகுதி அதிமுக பிரமுகரும், கோவை மாநகராட்சி பணிக் குழு தலைவருமான அம்மன் அர்ச்சுனனிடம் பேசியபோது, ‘குமாரசாமி என்பது முருகக் கடவுளின் அவதாரப் பெயர். அம்மாவுக்கு நீதி கிடைக்க வேண்டி நாங்கள் பிரார்த்தனை செய்தததில், அந்த முருகனின் பெயர் கொண்டவராலேயே விடுதலை கிடைச்சிருக்கு. அதை எங்கள் குழந்தைக்கு கட்சிக்காரர்கள் சூட்டி மகிழ்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x