

திருப்பதியில் 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் நேரடி சாட்சிகள் 3 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறக்கோரிய மனு மீதான விசாரணையை மே 8-ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திருப்பதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் ஏப். 7-ம் தேதி ஆந்திர அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தின் நேரடி சாட்சியான சேகர், பாலச்சந்தர், இளங்கோவன் ஆகியோர் தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இந்த 3 பேரிடமும் ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும் எனக்கேட்டு, மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய் தார்.
அந்த மனுவில், ஆந்திர என்கவுன்ட்டர் விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது. கொல்லப்பட்ட 20 தொழிலாளர்களுடன் சேகர், பாலச்சந்தர், இளங்கோவன் ஆகியோரும் சென்றுள்ளனர். தற்போது இவர்கள் 3 பேரும் தப்பிவந்தனர்.
இவர்கள் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட் டது.
இவர்கள் ஆந்திர நீதித்துறை நடுவரிடம்தான் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பதில்லை. எந்த நீதித்துறை நடுவரிடமும் வாக்குமூலம் அளிக்கலாம்.
மேலும் 3 பேரும் ஆந்திரத்துக்கு சென்று வாக்குமூலம் அளிப்பதில் சிரமம் உள்ளது. எனவே, 3 பேரிடமும் வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந் தது.
நீதிபதி கேள்வி
இந்த மனு நீதிபதி எஸ்.என்.தனஞ்செயன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் சின்ராஜ் வாதிடும்போது, சாட்சிகள் 3 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றார். அதற்கு, ஆந்திரத்தில் நடைபெற்ற சம்பவத்தின் சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ய இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
பின்னர், விசாரணையை மே 8-ம் தேதிக்கு நீதிபதி எஸ்.என்.தனஞ்செயன் ஒத்திவைத்தார். சேகர், பாலச்சந்தர், இளங்கோவன் ஆகியோர் நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.