

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து நேற்று பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
முன்னதாக தமிழக - கர்நாடக எல்லையில் நேற்று காலை 6 மணி முதல் இரு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்சியினர் யாரும் பெங்களூரு செல்ல வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், மிக குறைவான எண்ணிக்கையிலேயே அதிமுகவினர் பெங்களூரு சென் றனர்.
மேலும், ஓசூர் வழியாக பெங் களூரு சென்ற அனைத்து பேருந்து களிலும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. பெங்களூ ருக்கு அனைத்து வாகனங்களும், எவ்வித சோதனையுமின்றி சென் றன. அத்திப்பள்ளியில் பெங்களூரு எஸ்பி ரமேஷ்பானுத், ஏஎஸ்பி அப்துல்அகாத், டிஎஸ்பி பலராமே கவுடா ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
இதே போல், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் ஏடிஎஸ்பி ஆறுமுகச்சாமி, ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷனி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். எல்லை பகுதியில் தீயணைப்பு, வஜ்ரா உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தீர்ப்பு வெளியான பிறகு எல்லையில் எவ்வித பதற்றமும் இல்லாமல் இயல்பு நிலை காணப்பட்டது.